வெறும் கதைப்பிரியர்களுக்கு நான் சொல்வதெல்லாம், கதையின் கருவை எப்படியாவது வருந்திக் கக்கிவிட்டுத் தப்பினோம் பிழைத்தோம் என்று தப்பித்துக்கொள்ள வேண்டுமென்ற குறைந்தபட்சக் குறிக்கோளோடு எழுதப்பட்ட நாவல் அல்ல இது. நான் பிறந்து வளர்ந்து இன்றைய என் வயது அத்தனைக்கு எனக்குப் பழக்கமான ஒரு சமூகத்தின் நாடித் துடிப்புகள், பூர்வீக வரலாற்று விளக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், விழாக்கள், விளையாட்டுக்கள், வாழையடி வாழையாய் வந்தடைந்த கதைகள், பேச்சு வழக்குகள், தொனி விசேஷங்கள், வாக்கிய அமைப்புகள் - இத்யாதி இத்யாதியானவைகளை எல்லாம் கூடியமட்டும் சிந்தாமல் சிதறாமல் கலாபூர்வமாய் வெளிப்பிரகடனம் பண்ண இங்கே கதை வித்தானது பக்கபலமாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான்.