அப்பிக் கொள்வதால்
கண்களில் உறக்கம்
ஒட்டிக் கொள்வதில்லை
இப்படியானத் தனி இரவுகளின் பந்தத்தோடுப் படைத்துவிட்டக் கவிதைகளின் தொகுதி இது.
"இந்தப் பொழுதின் கவிதைகள்
இரண்டு பட்டாம்பூச்சி
நான்கைந்து வலசைப் பறவைகள்
ஒரு கைப்பிடி வானவில்
தேவைக்கேற்ப பூக்கள்
ஒரு சிட்டிகை மென்சோகம்
தேனீக்கள் இடை இடையில்
அவ்வப்போது,
“கண்ணாடி உவமைகள்”
என்று
நிலாவில் அமர்ந்த படி
வடை சுடும் பாட்டிப்போல்
சரிவிகிதம் பொருள் சேர்த்துச்
சுட்டுப் போடும்
கவிதைகள் இல்லை."
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்" கவிதையிலிருந்து...
காதலும் கவிதையும், தாகமும் தனிமையும், தவிப்பும் இனிமையும், இரவும் வலியும் புரியுமென்றால், இந்த உலகத்தின் மொழியும் புரியும். அந்த மொழிப் புரியும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு சொந்தம்.
நிச்சயம் நீங்கள் கடக்க வேண்டிய பக்கங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கும்.
நேற்று, ஆங்கில இலக்கிய மாணவன். இன்று, 'மீன்களின் விக்கல்கள்' ஆசிரியர்.
'ஒப்பம்' குறுநாவலும் கோவிட்-19 காலத்தின் தனிமையில் எழுதி முடித்துவிட்டார். விரைவில், அதுவும் வெளியாகும்.
இரண்டு வெவ்வேறு பணிகளில் வேலைப் பார்த்துக் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் கழிந்தப் பின், சட்டென்று வேலையை விட்டுவிட்டு வந்து எழுத்தின் மீதானத் தாகத்தில் தொடங்கியது தான் 'உயிர் காகிதம்' வலைத்தளம்.
அந்த வலைப்பக்கத்தில் முதலில் வெளியாகி, பின் மின்னூலாக உருவெடுத்தது தான் 'மீன்களின் விக்கல்கள்'. உயிர் காகிதம் மேற்கொண்ட ஓராண்டுப் பயணத்தின் முன்னோட்டமாய் இந்தக் கவிதைத் தொகுப்பு உங்களை வந்தடைந்திருக்கிறது. 'ஒப்பம்' குறுநாவல் தொடங்கி, இன்னும் பல படைப்புகளோடு உங்களை வந்தடைய ஆசிரியர் காத்திருக்கிறார்.