தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.
வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.
நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
இதனை வெளிக்கொணர அயராது உழைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அம்பலவர் திருவருளால் பிற திருமுறைகளும் விரைவில் வர இவ்வன்பர்கள் முன்னிற்பர் என்பதில் ஐயமில்லை. இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சிவனருள் பெற்றுச் சீரிய வாழ்வு பெற வேண்டுகின்றோம்.