குறிப்பாக வெகுஜன இதழ்களில் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு இடமேயில்லை. ஒரு நாவல் என்பது உத்தரவாதமாய் விறுவிறுப்பாய் இருக்க வேண்டும். காதல் மோதல் என்கிற ரசமான கலவைகள் அதில் அவசியம் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளே எல்லோரிடமும் உள்ளது.
விதிவிலக்காக யாராவது முயற்சி செய்தால் அவர்கள் சொந்த முயற்சியில் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் நாங்கள் தான் இலக்கியத்தின் காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சிறு பத்திரிகைகளில் செய்யலாம். இதுதான் இன்றைய எதார்த்த நிலை.
ஒரு முதிய பெண்மணியை கதாநாயகியாக வைத்து நான் எழுதிய இந்த நாவலில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லும் வாய்ப்பையும் எனக்களித்தது.
ஒரு திணிப்பாக அதைச் செய்யாமல் இயல்பாக கதைப் போக்கில் அவைகளை என்னால் செய்ய முடிந்தது.
இந்தத் தொடரில் எந்த ஒரு பாத்திரமும் கற்பனைப் பாத்திரமல்ல...! பரந்த இந்த மண்ணில் அங்கும் இங்குமாக நான் பார்த்து ரசித்த பாத்திரங்களையே எனது கருப்பொருளுக்குள் இழுத்துப் போட்டு பயன்படுத்திக் கொண்டேன்.
நிச்சயம் இந்த நாவல் வாசிப்பவர்கள் மனதில் நல்ல பாதிப்புகளை உருவாக்கி ஞாபகசக்தியிலும் அழியாமல் என்றும் வாழும் என்று நம்புகிறேன். நன்றி.
-இந்திரா சௌந்தரராஜன்