இவ்வாறு வளர்க்கப்படும் மைந்தன் பிற்காலத்தில் தன் மனம் போனவாறெல்லாம் நடக்கத் துணிகிறான். இதற்குத் தன் தாயையும் உடந்தையாக்கிக் கொள்கிறான். தன் மகனின் தவறான போக்கிற்கு அனுசரணையாக இருக்கும் அவள், அதனால் ஏற்படும் விபரீதங்களை உணரும் போதுதான் அவளுக்கு விழிப்பு ஏற்படுகிறது. காலம் கடந்து ஏற்படும் விழிப்பால் என்ன பயன்? சக்தியற்ற அந்த நிலையில் தன் குடும்பத்தில் பின்னர் தோன்றும் சந்ததியாவது நல்ல முறையில் வளர்க்கப்பட்டு, வாழ்வில் நலம் பெற வேண்டும் என அவள் விரும்புகிறாள். இந்நாவலின் கருவூலமாக இக்கருத்துக்களே அமைந்துள்ளன.
ரங்கம்மாளும் அவள் மகன் ராஜாவும் நம் கண்முன் உலவி வரும் உயிர்ச் சித்திரங்கள். வாழ்க்கையில் இத்தகைய பாத்திரங்களை நாம் சந்திக்கிறோம். நாவலாசிரியை சிவசங்கரி அவர்கள் தாய்ப்பாசத்தின் முரண்பட்ட போக்கால் ஏற்படும் விபரீதங்களை இந்நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் செய்யும் தவறுகளை, தாய்ப்பாசத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு அத்தவறுகளைத் திருத்துவதில் ஒரு தாய் உன்னிப்பாகவும் கண்டிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.