கால் நியூபோர்ட் அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளார். அதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நம்முடைய கலாச்சாரத்தின் சங்கமத்தைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் அவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற, சிறப்பான விற்பனையாகின்ற நூல்கள் பட்டியலில் அவருடைய நூல்களும் இடம்பெற்றுள்ளன. அவர் இதுவரை எட்டு நூல்களை எழுதியுள்ளார். ‘டீப் வொர்க்,’ ‘எ வேர்ல்டு வித்தவுட் இமெயில்,’ ‘டிஜிட்டல் மினமலிசம்’ ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவருடைய நூல்கள் முப்பத்தைந்திற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ், நியூயார்க்கர் உட்பட, பல பிரபலமான பத்திரிகைகளில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். அவர் தன்னுடைய வலைத்தளத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்ற கட்டுரைகளுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றனர். அவருடைய ‘பாட்காஸ்ட்’களும் மிகப் பிரபலமானவை. அவர் தற்போது தன்னுடைய மனைவியுடனும் மூன்று மகன்களுடனும் மேரிலேன்டில் வசித்து வருகிறார்.