Sri Annai

· Pustaka Digital Media
Ebook
97
Pages

About this ebook

ஸ்ரீ அன்னையின் அருளை வேண்டி... அரவிந்த அமுதம் என்ற தொடரைக் கல்கியில் எழுதினேன். ஸ்ரீ அன்னை என்ற இந்த நூலாக்கத்திற்குக் காரணமான தொடர் மங்கையர் மலரில் வெளிவந்தது. ஸ்ரீ அன்னை ஒரு மங்கை என்பதால் மங்கையர் மலரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் போலும்! ஏதேனும் ஒரு பத்திரிகையில் தொடராக எழுதும் நிர்பந்தம் இருந்தாலன்றி இப்படிப்பட்ட நூல்களை எழுத சாத்தியம் இல்லை. மங்கையர் மலர் ஆசிரியர் திருமதி லட்சுமி நடராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடரை நான் எழுதும் காலங்களில் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அடுத்தடுத்த இதழ்களில் எந்தெந்த மலர்களைப் பற்றிய குறிப்பை நான் எழுதப் போகிறேன் என்பதை முன்கூட்டியே விசாரித்தறிந்தார். அந்த மலரின் வண்ணப்படம் தொடரில் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார். அன்னையின் பொருத்தமான பல புகைப்படங்களைத் தேடித் தேடி வெளியிட்டார். ஸ்ரீஅன்னைக்கு இந்தத் தொடரை எழுதியதன் மூலம் நான் செய்த சேவையை விட, அக்கறையோடு இத்தொடரை வெளியிட்டதன் மூலம் அவர் செய்த சேவை இன்னும் பெரிது. அவருக்கு ஸ்ரீஅன்னையின் பூரண கடாட்சம் கிட்டட்டும். நாம் எழுதும் விஷயங்கள் மிகுந்த கவனத்தோடு வெளியிடப்படுவதை உணரும் போது நம்மையறியாமல் ஓர் உற்சாகம் தோன்றுவது இயல்பு. இந்தத் தொடரின் வெற்றிக்கு சகோதரி அனுராதா சேகர் அளித்துவந்த உற்சாகம் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் சிறப்பு நன்றி.

நான் அரவிந்தர் மையங்களில் சொற்பொழிவாற்றி வருகிறேன். இந்தத் தொடர் வெளிவந்த காலங்களில் நான் சொற்பொழிவாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் பல வாசகர்கள் என்னிடம் ஸ்ரீ அன்னை சரிதம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். சிலர் திடீர் திடீர் என இரவுநேரங்களில் கூட தங்கள் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி எந்த மலரை வைத்து ஸ்ரீஅன்னையை வழிபட வேண்டும் என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் அவர்களுக்கு நான் சில அறிவுரைகளைச் சொன்னதும் உண்டு. இதற்கெல்லாம் எந்தத் தகுதியும் எனக்கில்லை. என்னிடம் கேள்வி கேட்ட வாசகர்களைப் போல நானும் ஸ்ரீ அன்னையின் சக அடியவன், அவ்வளவே.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள். எதிர்காலத்தில் ஸ்ரீ அன்னை நெறியின் தேவை இன்றுள்ளதை விட இன்னும் அதிகமாகும். ஸ்ரீஅன்னையைத் தேடிவரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதை இப்போது காண்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதை எதிர்காலம் காணும்.

மதங்கள் ஆன்மிகத்தின் பாதைகளே. ஒவ்வொரு மதமும் அதனதன் அளவில் உயர்ந்தனவே. இலக்கை விட்டுவிட்டுப் பாதையைப் பற்றிச் சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போது மனம் சண்டையில் மயங்கி பயணம் மேற்கொள்ளாமல் தங்கள் தங்கள் பாதைகளில் நின்ற இடத்திலேயே நிற்கிறது. இதுவா ஆன்மிகம்? இது ஆன்மிகமல்ல. ஆன்மிகத்திற்கும் மதச் சண்டைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடுத்தவர் மதத்தை விடத் தன் மதம் தான் உயர்ந்தது என்று எவனொருவன் நினைத்தாலும் அவன் ஆன்மிகவாதியே அல்ல. எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன. எல்லா மதங்களும் இறுதியில் இறைவனைச் சென்று சேர்கின்றன என்று பரமஹம்சர் தெளிவாக அறிவித்துவிட்டார். பரமஹம்சர் அவதரித்து இத்தனை காலம் சென்ற பின்னும் இன்னமும் மதக் கலவரங்கள் தோன்றுகின்றன என்றால், ஜாதிச் சண்டைகள் ஏற்படுகின்றன என்றால் நம் மக்களின் மதியீனத்தை என்ன சொல்ல? ஒவ்வொரு புத்தகத்தைப் படிப்பதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். விஞ்ஞானப் புத்தகத்தைப் படிக்க ஒருவனுக்கு விஞ்ஞான அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இந்தப் புத்தகத்தை யாரெல்லாம் படிப்பதற்குத் தகுதி உடையவர்கள்? ஜாதி மதங்களில் ஏற்றத் தாழ்வு காணாதவர்கள், தீண்டாமை ஒரு கொடிய பாவம் என்பதை உணர்ந்தவர்கள், பெண்களும் ஆன்மிகத்தில் ஆணுக்கு நிகராகவும் மேலாகவும் உயரலாம் என்ற கோட்பாட்டை ஏற்பவர்கள் என இவர்களெல்லாம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தகுதி படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் இதயங்களில் இந்தப் புத்தகம் மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஸ்ரீஅன்னையின் பரிபூரண அருள் இந்த நூலின் வாசகர்களுக்குக் கிட்டுமாக. என்றும் ஸ்ரீஅன்னையின் நல்லருளை வேண்டி, திருப்பூர் கிருஷ்ணன்.

About the author

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினமணியில் கால் நூற்றாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை முதல் பரிசு, ஆனந்த விகடன் வழங்கிய சிறுகதைக்கான முத்திரைப் பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர்.

ஹரிவம்சராய் பச்சன் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது, சுகி சுப்பிரமணியம் நூற்றாண்டு விருது, டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் விருது, சென்னை கம்பன் கழகம் மூலம் நிறுவப்பட்டுள்ள எழுத்தாளர் சிவசங்கரி படைப்பிலக்கிய விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய 'சான்றோர்' விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞான வாரிதி, தமிழ்ச் செல்வம், தெய்வத் தமிழ் மாமணி, தமிழ் நிதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர்.

இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் வழங்குபவர்.

திரு ஏ.வி.எஸ். ராஜா அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்படும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர்.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.