கனவுகள் எண்ணங்களுக்குத் தக்கபடி மாறுபடுகின்றன. பருவங்களுக்குத் தக்கபடி வித்தியாசப்படும் கின்றன. வயதான ஒருவர் காணும் கனவு ஆன்மிக சம்பந்தப்பட்டவைகளாக - முதிர்ச்சியடைந்த மன நிலையைக் காட்டுவனவாக இருக்கும்.
இளைஞர்கள் காணும் கனவுகள்...
அவைகள் தொடர் ஊர்வலங்கள்...
இங்கே “கனவு ஊர்வலங்களின் கதாநாயகி” சத்யா, காதல் கனவுகளைக் காண்கிறான்.
கனவின் நாயகன் பணக்காரன் கெளசிக். அவனும் சத்யாவை மணக்க ஆசைப்படுகிறான்.
“காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே - கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே” என்ற கண்ணதாசனின் கவிதைக்கு இவர்கள் உதாரணம். காதலர்களின் காதலுக்குத்தான் கண்ணில்லை. கெளசிக்கின் பணக்கார பெரியம்மாவுக்கும் - கெளசிக்கின் அப்பாவுக்கும் கண்கள் இருந்தன - அந்தஸ்தைப் பார்க்கும் அளவு கோலாக.
இத்தனைக்கும் அப்பா தேவநாதன் ஏழையாக இருந்து சிறிது வசதியான பெண்ணை மணந்து தன் முயற்சியால் பணக்காரர் ஆனவர். அவருக்குப் பணத்தைத் தவிர வேறு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை.
சத்யாவை நெருங்கும் மகனை சதுரங்கக் காயை நகர்த்துவது போல் நகர்த்தும் சாமர்த்தியம் பணக்காரர்களுக்கே படரிய கை வந்த கலை. மகளின் காதலைத் தெரிந்து கொண்ட ஏழைத் தாயார் சாவித்ரி படும் மன வேதனை...
ஏற்பாடு செய்யப்பட்ட - கல்யாணம் நின்று போனதற்குக் காரணம் தெரியாமல் தவித்த தவிப்பு...
காதலர்கள் கனவு ஊர்வலம் வருகிறார்கள்... ஆனால், இந்த ஊர்வலத்தின் வெளியே நின்று பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு...
இவர்களுக்கு நடுவில் குறுக்கிடும் கதாபாத்திரங்கள்...
என் வாசகர்களே! ‘போதும்... கனவு ஊர்வலத்திற்குள் நாங்கள் நுழைய வேண்டும். இதற்கு மேலும் போக வேண்டாம்’ என்கின்றீர்களா! உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுப்பட வேண்டியவள் தானே!
என்றென்றும் அன்புடன், லட்சுமி ராஜரத்னம்