லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.
பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார். ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.
கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”. இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது. படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி.