நான் வியந்தவைகள். பிரமித்தவைகள் என்னோடு மட்டும் சங்கமிக்காமல் அவை மற்றவர்களையும் சென்றடைய “நூல்” ஒரு நல்ல மார்க்கமாகும் என உணர்ந்தேன். நான் ஒருநூல் வாசகராகவும், புதுமைகளைத் தேடுபவராகவும் (Adventurer/Explorer) அறிந்தவைகளை, சேகரித்தவைகளை, பெற்றுக் கொண்டவைகளை இந்நூல் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது முழு நிறைவை உணர்கின்றேன். அந்த நிறைவு என் வாழ்வை முழுமையாக்குகிறது. இந்நூல் ஒரு மழைத்துளி போன்றது. மேலும், மேலும் ஆழமாக ஆய்வு செய்ய மயன்கள், நாகர்கள் வரலாறு காட்டாறு போல் பாயும் என்பது திண்ணம். அவர்கள் பற்றிய ஆய்வு எம்மை நாமே ஆய்வு செய்யும் செயல் போன்றதே. மயன்களைப் பற்றி ஆய்வு செய்யும்போது நாகர்களைப் பற்றிய ஆய்வும் இயல்பாக அதற்குள் இணைந்துவிடும். இவர்கள் பற்றிய வரலாறு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு நூல் வடிவம் பெற வேண்டும். அந்நூல் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக வேண்டும். எனது இந்நூல் ஒருபாலபோதினி, பாலபாடம் போன்றது என்பதை நான் நன்கு அறிவேன். பாலபோதினி, பாலபாடத்தில் ஆரம்பமான கல்விதான் இன்று பல்கலைக்கழகம் வரை தொடர்கின்றது.
மயன்களும் நாகர்களும் அளப்பரிய ஆற்றலை எங்கேயிருந்து பெற்றுக்கொண்டார்கள்? இவர்கள் இப்பூமியில் நடமாடியவர்கள் என நினைக்கும் போது உற்சாகம் கரைபுரண்டு ஓடூகின்றது. அறிவியல் வளர்ச்சி அதிகம் மேலோங்காத கி.மு. காலத்திலே நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கியுள்ளார்கள். சகலகலா வல்லவர்களாக திகழ்ந்தும் உள்ளார்கள்.