திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளியொன்றில் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசர் கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று முதல் வகுப்பில் "தமிழ்விதவான்" பட்டம் பெற்றவர். பின்னர் சென்னை சைதாப்பேட்டை ஆசி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்று சான்றிதழ் பெற்றவர் பின்பு எட்டாண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். தனிப்பட்ட முறையில் (Private study) தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிந்தவர்.
பிறகு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வெழுதி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற பின் தமிழகஅரசு சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றவர் பிறகு சிறைத்துறையில் மண்டல நன்னடத்தை அதிகாரியாகப் பணி உயர்வு பெற்றவர் பணிநிறைவிற்குப் பின் கல்லூரியில் முழு நேர மாணவராகச் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றவர். முன்னதாக, தமிழ் எம்.ஏ. தேர்வினை தனிப்பட்ட முறையில் (Private)எழுதி காமராசர் பல்கலையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழும் ரொக்கப்பரிசும் பெற்றவர்.
இலக்கியம், ஆன்மீகம், கல்வெட்டு முதலிய பல்வேறுதுறைகளில் இன்றுவரை இருபத்துநான்கு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். சித்த மருத்துவம் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகிய துறைகளில் சிறந்த நூல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முறையே முன்னாள் முதல்வர்கள் திரு. கருணாநிதி மற்றும் செல்வி. ஜெயலலிதா ஆகியோரிடம் ரொக்கப்பரிசு பெற்றவர் இவரது இருபத்தைந்து மற்றும் இருபத்தாறாவது நூல்கள் அச்சேறும் நிலையில் உள்ளன.