பூமியின் மொத்தப் பரப்பளவில் கடல்கள் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. பூமியின் மொத்த நீர் ஆதாரத்தில் 97 சதவீதம் கடல்களில் உள்ளது.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே திரவ வடிவில் நீர் இருக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன.
பூமியில் உள்ள கடல்கள்தான் உயிரினத்தின் தோற்றுவாய் என்கிறார்கள். இப்போதும் கடல்களில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன.
கடல்கள்தான் பூமியின் தட்பவெப்ப நிலையை தீர்மானிக்க உதவுகின்றன. சூரியனின் கதிரியக்கத்தை உள்வாங்கி வெப்ப நிலையை மிதப்படுத்துகின்றன. கடலில் உற்பத்தியாகும் மின் அலைகள் பூமி முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் நிலத்தையும் காற்றையும் உஷ்ணப்படுத்தவும், கோடைக் காலத்தில் இரண்டையும் குளிர்ச்சிப் படுத்தவும் இவை உதவுகின்றன.
பூமியில் உள்ள கடல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. 2000ம் ஆம் ஆண்டு வரை நான்கு அங்கீகரிக்கப்பட்ட பெருங்கடல்கள் இருந்தன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டன. 2000ம் ஆண்டின் வசந்த காலத்தில் கூடிய சர்வதேச மாநாட்டில் புதிய பெருங்கடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றியுள்ள கடலுக்கு தெற்கு பெருங்கடல் என்று பெயரிட்டது.
இந்த ஐந்து பெருங்கடல்கள் தவிர, ஏராளமான சிறிய கடல்களும் உள்ளன. இவற்றில் தெற்கு சீனக் கடலும், கரீபியன் கடலும், மத்தியத் தரைக் கடலும் மிகப் பெரியவை. இந்த புத்தகத்தில் இந்த கடல்களை பற்றிய விவரங்கள் உள்ளன.
அடுத்ததாக கண்டங்களும் துணைக் கண்டங்களும் பற்றிய விவரங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
கண்டங்கள் என்பவை எவை?
சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட, பிளவுபடாத தொடர்ச்சியான பரந்த நிலப்பரப்பு கண்டம் என்று அழைக்கப்படுகிறது. சில கண்டங்கள் நிலத்தட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா.
பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டங்கள் ஓஸானியா என்று அழைக்கப்படுகின்றன. இருந்தாலும், இவை ஒரு கண்டத்தின் எஞ்சிய பகுதிகள் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.
புவியியல் உண்மைகளை புறக்கணித்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக ஒரு பகுதியை கண்டம் என்று அழைப்பதும் உண்டு. ஐரோப்பா என்பது ஆசியா கண்டம் அல்லது யுரேசியா கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள தீபகற்பமாகும். இருந்தாலும், யுரல் மலைத் தொடருக்கு மேற்கே உள்ள பகுதி முழுவதையும் ஐரோப்பா கண்டம் என்றே அழைக்கிறார்கள்.
இதுபோன்ற பல உண்மைகளை இந்த நூல் உள்ளடக்கி இருக்கிறது.
கடல்கள், கண்டங்கள் தவிர உலகின் முக்கியமான தீவுகள், முக்கியமான பாலைவனங்கள், மிகப்பெரிய மலைத்தொடர்கள், உயிர்ப்புள்ள எரிமலைகள் ஆகியவற்றை பற்றிய விவரங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
இவை மட்டுமின்றி பூமியைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு எளிமையாக படங்களுடன் பதில் அளிக்கிறது இந்த நூல்.
சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லாத் தரப்பினரும் சுருக்கமாக அறிந்து கொள்ளவும் ஆச்சரியம் கொள்ளவும் இந்த புத்தகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
அன்புடன்
அ.சோழராஜன்
ஆதனூர் சோழன். நிஜப் பெயர் சோழராஜன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் எனது கிராமம். 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பிறந்தேன்.
சிறுவயதில் இருந்தே நிறைய படிப்பேன். எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் எனது கனவு.
அலங்காநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, மதுரை தத்தனேரியில் உள்ள வைத்தியநாதய்யர் நினைவு நடுநிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் உள்ள தம்பித்தோட்டம் உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தேன். மதுரை வக்ஃப் போர்டு கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்தேன்.
அதன்பிறகு, தினமலர், தினமணி, முரசொலி, தீக்கதிர், மாலைமுரசு, ஜனசக்தி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன்.
தற்போது, நக்கீரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாவை உள்ளிட்ட புகழ்பெற்ற பதிப்பகங்களுக்கு நூல்கள் எழுதி வருகிறேன். வாழ்க்கை வரலாறு, அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள் என்று 100க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.
பிரபாகரன் வரலாற்றை “தலைவன் - ஒரு இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.
ஹிட்லர், நெப்போலியன், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேபாளம் மன்னராட்சி டூ மாவோயிஸ்ட், நேதாஜி, இ.எம்.எஸ்.. ஜோதிபாசு, ஒபாமா, பெனாசிர், உள்ளிட்ட வரலாற்று நூல்களையும்,
ஸ்புட்னிக் முதல் சந்திராயன் வரை, பூமியின் புதிர்கள், உள்ளங்கையில் உலகம், மிஸ்டர் மனிதன், நீங்கள் நல்ல அம்மாவா?, கண்டுபிடிப்புகள் 2008 வரை, கி.மு. முதல் கி.பி. வரை..., பனி மனிதன், உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி? உள்ளிட்ட அறிவியல் மனநல நூல்களையும் எழுதி இருக்கிறேன்.
இப்போது, சிபி பதிப்பகம், ராதை பப்ளிகேஷன்ஸ் என்ற இரண்டு பதிப்பகங்களை சொந்தமாக நடத்தி வருகிறேன்.
ஆங்கிலத்திலிருந்து எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும் திறமை இருக்கிறது. டைப்பிங், லே அவுட், அட்டை வடிவமைப்பு ஆகியவையும் தெரியும். எனது நூல்களை நானே டைப் செய்து, வடிவமைத்து பதிப்பகங்களுக்கு தருகிறேன்.
முற்றிலும் இளைஞர்களுக்கான இணையதளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். இந்த இணைய தளம் தமிழ்ச் சமுதாயத்துக்கு நல்லது செய்வது என்ற ஒரே குறிக்கோளை லட்சியமாக கொண்டது. எனது தொடர்பு எண்கள், 9840496702..
அன்புடன்,
ஆதனூர்சோழன்